Skip to main content

கோடை மழையில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து மண் வளத்தைப் பாதுகாக்கலாம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் தகவல்


தர்மபுரி, ஏப்.25
கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க இயலும் என்று தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம், முனைவர் ம.சங்கீதா ஆகியோர் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் விவசாயிகளுக்கு கூறிய ஆலோசனையில்: விவசாயிகள் தற்போது கிடைக்கப்பெற்ற கோடை மழையைப் பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் அடுத்து ஆனி மற்றும் ஆடி மாதங்களில் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்குத் தேவையான இயற்கை உரங்களை எளிதில் பயிருக்கு அளிப்பதுடன், மண்வளத்தையும் பாதுகாக்க இயலும். தற்போது, தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு அல்லது பயறு வகைப் பயிர்களை குறிப்பாக காராமணி ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்றளவில் விதைத்து, பூ பூக்கும் பருவம் வரை வளரவிட்டு, அந்த நிலத்திலேயே மண்ணில் ஈரம் இருக்கும் போது மடக்கி உழுதுவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் பசுந்தாள் உரப் பயிர்கள் மண்ணில் நுண்ணுயிர்களின் உதவியுடன் சிதைக்கப்பட்டு, அவற்றிலிருந்து ஹீயுமஸ் எனப்படும் மக்குப் பொருள், பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது. இவை அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்கள் நன்கு செழித்து வளர உதவுகிறது.

மண்ணில் உள்ள மக்கு அல்லது அங்ககப் பொருள்களின் அளவே மண் வளத்தை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணில் இடுவதால், மண்வளம் அதிகரிக்கப்படுவதுடன், இதர ஊட்டச் சத்துகளின் அளவையும் அதிகரிக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்கள் ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியுடன் காற்றிலுள்ள தழைச்சத்தை வேர் மற்றும் தண்டு முடிச்சுகளில் சேமிக்கின்றன. எனவே, அவற்றை மண்ணுக்குள் மடக்கி உழுவதால், ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 30-75 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது. பசுந்தாள் உரப்பயிர்கள் மக்கும்போது வெளிப்படும் அங்கக அமிலங்கள் மண்ணில் கரையாத நிலையிலிருக்கும் ஊட்டச்சத்துகளை, குறிப்பாக மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன. மேலும், மண்ணின் களர் மற்றும் உவர் தன்மையை இயற்கை முறையில் சீர்திருத்தம் செய்யவும் உதவுகின்றன.
பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணுக்குள் மடக்கி உழுவதால், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரித்து, பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றன. இவை மணற்பாங்கான நிலங்களில் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. களிமண்பாங்கான நிலங்களில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நல்ல வடிகால் வசதியையும் ஏற்படுத்தித் தருகிறது. கோடைக் காலங்களில் பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், மண் போர்வை போல செயல்பட்டு மண் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. பயிர் சுழற்சி முறையில் பசுந்தாள் உரப் பயிர்களைச் சாகுபடி செய்வதால், வழக்கமாக பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் சுழற்சியில் இடையூறு விளைவிக்கும். எனவே, விவசாயிகள் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிரிட்டு, மண்ணில் மடக்கி உழவு செய்து, பின் பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்வளத்தை அதிகரித்து, பயிர்களில் அதிக மகசூலைப் பெற இயலும் என்றனர்.

Comments

Popular posts from this blog

அக்ரி-டாக்டர் மின் நாளிதழ்

https://agridoctor.in/?p=15  

பருத்தி வயலில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

திருவாரூர், ஏப்.25 திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள ராதாநல்லூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயிலில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது, பருத்தி வயலில் அசுவிணி மற்றும் இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறது. அசுவிணியின் தாக்குதலால் இலை ஓரங்கள் கீழ்நோக்கி சுருண்டு கீழ்நோக்கிய கிண்ணம் போன்று காணப்படும். இலைப்பேன் தாக்குதலால் இலைகளின் அடிப்பாகத்தில் மிக நுண்ணிய வெண் புள்ளிகளும், சேதம் மிக அதிகமாக உள்ளபோது இலைகள் மொரமொரப்பாகவும், மேல் நோக்கி வளைந்தும் காணப்படும். ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: மக்காச் சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும் போது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக இருக்கும். வயல் வரப்புகளில் தட்டைப் பயரை ஓரப்பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப

தென்னையில் குருத்தழுகல் நோய்

     தென்னையில் குருத்தழுகல் நோய்